Saturday, July 3, 2010

காதல் கவிதைகள்..!!!











கவிதைகள்..!!









காதல் கவசம்


நினைத்தாலே கொஞ்சிடவோர் நெஞ்சமோர்
வஞ்சி நுழைந்தாலே காதல் மலர்ந்து மகிழ்ந்தாடும்
நித்திரை கலைந்தோடும் இரவு பகல் நெஞ்சம்
தொட்டு கவர்ந்தவளின்

இதயம் குடியேற கடிதம் வரைந்து
வருகை தர கெஞ்சும் விழி

சூரியன் எழுந்து வரும் திசை கிழக்கு
நீ வரும் திசை தான் என்றுமென் கிழக்கு
முகத்திரையை மெல்ல நீ விலக்கு - இல்லை
தொடரும் உன் மீது என் விழி வழக்கு

கைகள் தொடும் தூரம் இதயம் இருக்கு
விரல் தொட்டு பார்த்திட விரதம் இருக்கு
வழிவிட்டால் தானே தொடுவது மானே
தொடத் தொட புதுவித சுகமும் பிறக்கும்

எட்டாத் தூரத்தில் நிலவது இருக்கு
நினைத்தால் உள்ளங்கையது இருக்கும்
நீ அந்த நிலவாய் வருக வருக
நேர்முக வர்ணனை பெறுக பெறுக

அந்தியில் சந்திரன் நகலே வருக
சுந்தரன் இந்திரன் மகளே வருக
ஆயிரம் தாமரை முகமே வருக
பூமரம் சாமரம் வீசிறிட வருக வருக

உயிரின் உயிரே எனதுயிர் நீயே
உயிரே உயிரே எனதாருயிரே
உனதுயிர் எனதுயிர் வேறானதா
இனி நமதுயிர் என்றும் இரண்டல்ல ஒன்றே (2)

உனதுயிர் எனதுயிர் ஓருயிர் உயிரே
இணைய இணைய வாழும் உயிரே
உயிரும் உயிரும் உரசிடும் பொழுது
மறுமுறை பிறந்த உணர்விங்கு வருது
காகிதம் இன்றி தந்திகள் அனுப்ப
கண்களும் இதயமும் காத்துக் கிடக்கு
அடிக்கடி காதலி தந்தியும் அடிக்க
விரிந்தன இமைகள் விரித்ததைப் படிக்க
எண்ணம் முழுதும் எழுதி வைத்தேனே
அதில் என்னை முழுவதும் கொடுத்துவிட்டேனே
இதயம் ஒன்றையும் அனுப்பி வைத்தேனே
அது இருக்கும் இடம்தனில் சேர்த்து விட்டேனே

காதல் சின்னம் தாஜ்மஹாலே
கண்களில் மின்னுது காதல் மஹாலே
வெண்மை நிறங்கொண்ட தாஜ்மஹாலே
உண்மைக் காதலை உணர்த்தும் மஹாலே (2)

காதலர் கூடிடும் காதல் மஹாலே
காதலை எழுதிடும் கவிதை மஹாலே
காதலைப் பளிச்சிடும் பளிங்கு மஹாலே
காதலைப் புனிதம் என்ற மஹாலே
காதலர் வணங்கும் வண்ண மஹாலே
காதலர் ‌ நெஞ்சினைக் கிள்ளும் மஹாலே
ஆயிரம் ஆண்டினைக் கடந்த மஹாலே
அதிசயம் ஏழினில் இணைந்த மஹாலே
காதல் பாடம் சொல்லும் மஹாலே
காலம் காலமாய் வாழும் மஹாலே
காதலைத் தூய்மைப் படுத்தும் மஹாலே
கல்நெஞ்சம் எதையும் கரைக்கும் மஹாலே
தலைமுறை தாண்டி வாழும் மஹாலே
தாய்த்திருநாட்டின் தலைமை மஹாலே
நாளைய தேசம் மதிக்கும் மஹாலே
நம்மிடம் நேசம் வளர்க்கும் மஹாலே
யுகங்கள் கடந்தும் வாழும் மஹாலே
ஜனங்கள் புகழ்ந்து போற்றும் மஹாலே
வேண்டாம் இன்னொரு தாஜ்மஹாலே
நீயிருந்தால் என் இதயமஹாலே


கலியுகம் இதுவா காதலர் யுகமா
ஐயம் இருக்கு அவனியில் சமமா
கம்பியூட்டர் யுக நீதிபதியுமே
காதல் யுகமென கணித்தது சரியாய் (2)

முகப்பருவை கிள்ளி எறிவதைப் போலே
முதல் கடிதம் அதைக் கிழித்து விட்டாயே
முதல் வரியை நீ படித்திருந்தால் என்
முகவரியைத் தேடி அலைந்திருப்பாயே
முகப்பரு மீண்டும் முளைத்திங்கு வருமே
அது போல் கடிதம் தொடர்ந்தே வருமே
அடிக்கடி அது உன் எல்லைக்கு வருமே
அனுதினம் அன்புத் தொல்லையும் தருமே
கடிதங்கள் இது வெறும் கடிதங்கள் அல்ல
ஏவுகணைக் காதல் ஏவுகணை உன்
இதயம் வரை வரும் இயன்றவரை சிறை
எடுத்து வரும் உன் இதயம் அதனை

கம்பனும் உன்னை கண்டதும் கண்டதும்
காவியம் இரண்டெனத் தந்திருப்பான்
கண்ணதாசனும் கண்டதும் உன்னைக்
கவிதைச் சிறையில் அடைத்திருப்பான் (2)

இருவரில் ஒருவரும் இன்றிங்கு இல்லை
இருந்தால் போட்டிகள் வருவது உண்மை
அவர்களுக்கில்லா பெருமை எனக்கு நீ
வாழும் காலம் நான் வாழ்வதில் இருக்கு
இதுவே எனக்கு போதும் உனை நான்
அடைந்திட நடத்துவேன் யாகம் யாகம்
மனமதில் இடத்தைக் கொடுத்து கொடுத்து
மரணத்தை ஒருமுறை தடுத்து நிறுத்து
இதயம் இரும்பா சொல்லிடு சொல்லு
உருகும் மெழுகா உண்மையை சொல்லு
இரும்பாய் இருந்தால் உருக வைப்பேனே
மெழுகாய் இருந்தால் உயிரை வைப்பேனே
அவர்களுக்கில்லா பெருமை எனக்கு நீ
வாழும் காலம் நான் வாழ்வதில் இருக்கு
இதுவே எனக்கு போதும் உனை நான்
அடைந்திட நடத்துவேன் யாகம் யாகம்
மனமதில் இடத்தைக் கொடுத்து கொடுத்து
மரணத்தை ஒருமுறை தடுத்து நிறுத்து
இதயம் இரும்பா சொல்லிடு சொல்லு
உருகும் மெழுகா உண்மையை சொல்லு
இரும்பாய் இருந்தால் உருக வைப்பேனே
மெழுகாய் இருந்தால் உயிரை வைப்பேனே

அழகே அழகின் மறுபதிப்பே நீ
ஆண்டவன் அளித்த அன்பளிப்பே உனை
அடைந்தால் தானே மதிப்பே எனக்கு
அடையாவிடில் இந்த பிறப்பே எதற்கு
ஊர்வசி மேனகை ரம்பை எவரும்
உயிரோடில்லை பரவாயில்லை
மூவரின் நகலை மகளாய்த் தந்த
உன் தாயிடம் சொல்வேன் நன்றி என் நன்றி
பார்த்ததும் கண்கள் படையெடுத்தே வரும்
பாதையில் நடக்கும் படப்பிடிப்பே தினம்
கண்ணொளி பாயும் மின்னொளி போலே
விண்வெளி யாவும் உன் மொழி தானே
சிரித்தால் நீயொரு வெண்தாமரைப் பூ
முறைத்தால் கூட நீ செந்தாமரைப் பூ
சிந்தும் வார்த்தைகள் இனிக்கும் கரும்பு
சிரிப்பொலி கேட்டதும் விண்வெளி திரும்பும்

பூவின் பூவே புன்னகைப் பூவே
பூவே பூவே மல்லிகைப் பூவே
வந்திடு வந்திடு வாசனை வீசி
நெஞ்சினில் காதல் சந்தனம் பூசி
என்னிடம் இருப்பது இதயம் ஒன்றே
உன்னிடம் கொடுக்க முயன்றேன் அன்றே
கல்லூரிக் கதவு திறந்திடும் முன்பே
கண்களும் கால்களும் நுழைந்திடும் அங்கே
இரவினில் பகலினில் இனியவள் முகமே
விழிகளில் நுழைந்திட புதுப்புது சுகமே
விடியும் வரையில் கனவுகள் சுகமே
விடிந்தால் மலரும் நினைவுகள் சுகமே
நினைவலை கனவலை தொடரும் நெஞ்சில்
என் நிலை உனக்கது புரியலை ஏனோ
என் நிலை உன் நிலை ஓர் நிலை தானோ

மேகத்தைச் சுருக்கி கூந்தலில் அடைத்தாய்
மின்னலை வளைத்து புருவும் வரைந்தாய்
நிலவினைப் பிடித்து முகமதில் பதித்தாய்
மதுமலர் இதழ் பதித்திதழ்களில் பதித்தாய்
மௌனத்தைப் பேசும் மொழியெனக் கொண்டாய்
எனக்கது புரியும் வழியொன்றும் சொன்னாய்
தென்றலை நடையில் கொண்டு வந்தாய்
தென்னங்கீற்றினில் சடை நீ பின்னி வந்தாயே
அலைகளை அடுக்கி நெளிமுடி தொடுத்தாய்
எழுதும் கவிதை வரிகளில் தொடர்ந்தாய்
மேகத்துக்கொரு நாள் தாகம் எடுக்கும்
தாகம் எடுத்ததும் கடல்நீர் குடிக்கும்
உனக்கும் ஒரு நாள் காதல் பிறக்கும்
உடனே உன் மனம் என்னை நினைக்கும்
காதலுக்கு அன்று சுதந்திர திருநாள்
கனவுக்கு அன்றே விடுமுறை வரும் நாள்
புத்தகப் புழுவாய் இருந்தேன் முன்னால்
புத்தகம் திறக்க மறந்தேன் உன்னால்
இதயம் பிடிப்பது குறிக்கோள் என்றே
இரவில் படிப்பதை நிறுத்தினேன் கண்ணே

போர்க்குணம் மாறணும் அன்பே அன்பே
புகழ்ந்து உனைப் பாடணும் அன்பே அன்பே
கனிமொழி வரும் வழி தினம் தினமே நான்
காத்திருந்தேன் மனம் கனிந்திடுவாய்
குளு குளு நதியில் நீ தெரிவாய் நான்
குளித்திடும் நீரில் நீ வருவாய்
குறுநகை சிந்திடும் நாள் தான் எதுவோ
குறிப்பினில் உணர்த்தும் நாள் தான் எதுவோ
அன்பே எழுவாய் எழுந்து நீ வருவாய்
காலையும் மாலையும் நிழலென வருவேன்
நாணத்தில் யன்னல் கதவினைச் சாத்து
நான் வர I LOVE NOW YOU சொல்லு
மார்கழி பனித்துளி போல் சிரித்தே
அதிகாலையில் வாசலில் நீர் தெளித்தாயே
நீ இடும் கோலத்தில் மாவெனவே நான்
மறைந்து வந்தேன் காதல் மாணவனாக

அறிவியல் பாடம் படித்தவள் காதல்
ஆக்ஸிஜன் கொடுத்து உயிர் காத்திடுவாயே
புவியியல் பாடமும் படித்தவள் காதல்
விதை அள்ளி நெஞ்சில் விதைத்திடுவாயே
சரித்திரம் முழுதும் தெரிந்தவள் காதல்
சரித்திரம் எழுதிட சம்மதம் அளிப்பாய்
வேதியல் பாடமும் படித்தவள் காதல்
அணுக்களை குருதியில் கரைத்திடுவாயே
கணக்கினை கரைத்து குடித்தவள் நீயே
காதலை காதலில் பெருக்கிடு உடனே
தாய்மொழி ‌ தமிழ்மொ‌ழி ஆங்கிலம் பொதுமொழி
இருமொழி எடுத்தும் காதலை முன்மொழி
இத்தனை பாடம் படித்திருந்தாலும்
இருக்குது இன்னொரு முக்கிய பாடம்
எத்தனை பாடம் படித்திருந்தாலும்
பருவத்தில் படிக்கணும் காதல் பாடம்

ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு
காதலை அறிந்தே காதலை செய்வோம்
அம்பிகாபதி அமராவதி காதலை
அறிவோம் அறிந்தே காதலை வெல்வோம்
உயிரைக் கொடுத்து காதலை வளர்ப்போம்
இவர்கள் யாவரும் சீனியர் நமக்கு
வெற்றியை நழுவிய காதலர் சிந்திய
கண்ணீர் துளிகள் அதுதான் கடலோ
காதலர் சிந்திய கண்ணீர் துளியால்
கடல்நீர் உப்பாய் மாறியதன்றே
கடலில் அலைகள் ஓய்வது இல்லை
காதலும் அதுபோல் இதுவே உண்மை
வாழ்வினை தியாகம் செய்தவர் வாழும்
சோதனைக் கூடமே கல்லறையாவும்
அவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தி
காதலை மதிப்போம் கண்ணீர் வடித்து
காதலும் ஒரு வகை தெய்வீகம் இதை
காத்திட முழங்குது என் கீதம்
பாடணும் பாடணும் காதலர் யாவரும்
காதலர் கீதையாய் காதலர் தினமே

இலைமேல் விழும் பனித்துளி போல் நெஞ்சில்
எழுவது உண்மைக் காதல் இல்லை
சிப்பியில் விழும் மழைத்துளி போல் நெஞ்சில்
வருவதை உண்மைக் காதல் என்பேனே
ஒருதலைக் காதல் என்று சொல்லி ஓர்
உயிரைப் பறிப்பது நியாயமே இல்லை
ஒருதலைக் காதல் என்றெண்ணி உயிரை
விடுபவர் யாவரும் கோழைகள் உண்மை
ஒருதலைக் காதல் என்பதனால் உயிர்
தியாகம் செய்வதில் அர்த்தமே இல்லை
உயிரைத் தியாகம் செய்வதனால் நம்
உயிருடன் காதல் வருவதும் இல்லை
காதலின் முடிவு மரணமென்றால் அதை
மாற்றிக் காட்டிட சபதமெடுப்போம்
முதலில் மறுக்கும் பெண்ணிதயம் அது
முடிவில் இருக்கும் ஆணின் இதயம்

மான்களும் மீன்களும் துள்ளுது அங்கே
காரணம் காதல் வென்றது இங்கே
அருவியும் குருவியும் ஆடுது சடுகுடு
காதலைக் காதல் வென்றதே என்றே
காதல் இல்லாதொரு ஜீவனும் இல்லை
இருந்தால் அது ஜீவனே இல்லை
காதல் இல்லாதொரு தேசம் இல்லை
இருந்தால் அது நம் தேசம் இல்லை
காதலை மனிதா வணங்கு வணங்கு
கடவுளைப் ‌போலவே நினைத்து நினைத்து
மதங்களும் ஜாதியும் காதலை எதிர்த்தால்
வேண்டாம் மரமென வெட்டியே சாய்ப்போம்
காதல் காதல் காதல் எந்நாளும்
வாழும் வாழும் மூச்சு நின்றாலும்
வாழும் தேசமே காதலர் தேசம்
காதலர் கீதமே தேசிய கீதம்
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய காதல்
ஜெயஜெய ஜெயஜெய காதல் ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய காதல் ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய காதலே ஜெயஜெய
பறக்கும் பறவை அதை நீ கேளு
காதலை புனிதம் என்றே சொல்லும்
நிலவினை மலரினை அழைத்தே கேளு
காதலை புனிதம் என்றே சொல்லும்
ஓடும் நதியினை நிறுத்தி நீ கேளு
காதலை புனிதம் என்றே சொல்லும்
கருவில் வளரும் சிசுவையும் கேளு
காதலை புனிதம் என்றே சொல்லும்
பருவம் அடைந்த பெண்களைக் கேளு
உன் காதலி அவளின் கருத்தையும் கேளு
புனிதம் புனிதம் காதல் புனிதம்
புனிதம் புனிதம் காதலே புனிதம்.

-நன்றி-